பெங்களூரு: பெங்களூருவில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் ஹென்னூர் சாலை, ஓசூர் சாலை, மைசூரு சாலை ஆகியவற்றில் மழை நீர் வெள்ளம் போல கரை புரண்டோடியது.
நேற்றும் மாலை 5 மணிக்கு மீண்டும் தொடங்கிய கனமழை 7.30 மணி வரை ஓயாமல் பெய்தது. இதனால் ஹென்னூர், பைரத்தி, கிருஷ்ணராஜாபுரம், கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில் அலுவலகம் சென்று வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
சில்க் போர்ட், சாந்தி நகர், எலஹங்கா, ஹொர்மாவு உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடிருப்புகளுக்குள் மழை நீர் உள்ளே புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்களும், அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் நீரில் மூழ்கின.