புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒருபுறம் சொத்து ஆகவும் மறுபுறம் சுமையாகவும் கருதப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பெற்றோரும் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தேசிய அளவில் இந்து குடும்பங்களில் குழந்தைபேறு சதவீதம் குறைந்து வருகிறது. அதேநேரம் இதர சமுதாயங்களில் குழந்தை பிறப்பு சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. மதமாற்றம் காரணமாக இந்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மதமாற்றத்தை அனுமதிக்கக்கூடாது.
மத்திய அரசின் அனைத்து விவகாரங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பே முடிவு எடுக்கிறது என்பது மிகவும் தவறான கருத்து ஆகும். நாங்கள் அறிவுரைகளை மட்டுமே வழங்குகிறோம். அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நான் ஒருபோதும் கூற வில்லை. அந்த வயதில் ஓய்வு பெறுவது கட்டாயமில்லை. 80 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தினால், நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். ஆர்எஸ்எஸ்என்ன சொன்னாலும் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.