மதுரை: மதுரை ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் இன்று தகுதியற்ற நடுவர்களால் சிலம்பம் போட்டிகளை நடத்துவதாகக் கூறி வீரர்கள், அவர்களது பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மதுரையில் ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழக முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதனயொட்டி இன்று மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. இதில் கலந்துகொள்ள மாவட்டம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவியர்கள் காலை 6 மணிக்கே வருகை தந்திருந்தனர்.
ஆனால் தகுதியான நடுவர்கள் இல்லாமல் இப்போட்டிகளை நடத்துவதாக சிலம்ப வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சோர்வு அடைந்ததாகவும் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிலம்ப வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கூறியது: “முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் என்பதால் மாணவர்களை அழைத்து வந்தோம். இங்கு சிலம்ப விளையாட்டின் விதிமுறைகள் தெரியாத உடற்கல்வி ஆசிரியர்களை நடுவர்களாக நியமித்துள்ளனர். இதனால் சரியான வீரர்களை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டிகளில் மாணவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான குடிநீர், முதலுதவி, கழிவறை, பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பும் சரியில்லை. மேலும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
தற்போது காலை 11.30 மணி வரை போட்டிகள் தொடங்கப்படவில்லை. அரசுப் பொதுத்தேர்வு எழுதும் 10, பிளஸ் 2 படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை இப்போட்டிகளுக்கு அனுப்ப தலைமையாசிரியர்கள் மறுக்கின்றனர். அவர்களையும் மீறி முதல்வர் கோப்பை என்பதால் போட்டிக்கு அழைத்து வருகிறோம். தகுதியற்ற நடுவர்களை நியமித்து போட்டி நடைபெறும் நாட்களை வீணாக்குகின்றனர். இனிமேலாவது தகுதியானவர்களை நடுவர்களை நியமித்து போட்டிகளை நடத்த வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விசாரித்து, போட்டிகள் ஆக.29-ம் தேதி (நாளை) நடைபெறும் என அறிவித்தனர்.