தஞ்சாவூர்: “2006 தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கணித்துள்ளார்.
தஞ்சாவூரில் திருமண விழாவில் இன்று பங்கேற்ற டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “பல்வேறு மொழிகள் பேசும் – வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் இந்தியாவில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து யார் அவதூறு பேசினாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல 2026 தேர்தலில் விஜய் தாக்கம் ஏற்படுத்துவார் என நான் கருதுகிறேன். இது, அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பை உருவாக்கும். யதார்த்தத்தை கூறுவதால் நான் அவருடன் கூட்டணிக்கு போகிறேன் என அர்த்தம் அல்ல. எங்கள் கூட்டணி டிசம்பர் மாதம் இறுதியாகும். அதன் பிறகு தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசலாம்.
பிரதமராக 3-வது முறை மோடி வருவதுதான் நாட்டின் பாதுகாப்புக்கும், வரலாற்றுக்கும், எதிர்காலத்துக்கும் நல்லது என்கிற அடிப்படையில், எந்த நிர்பந்தமும் இல்லாமல் 2024 தேர்தலில் நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். மன வருத்தத்தில், வேறு வழியின்றி கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை, டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் சமாதானம் செய்து மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வருவதுதான் நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதிகார பலத்துடன் உள்ள திமுகவை, ஜெயலிலதாவின் தொண்டர்கள் அனைவரும் இணைந்து கூட்டணி பலத்துடன் வீழ்த்த முடியும் என கூறி வருகிறேன். இதற்காக அதிமுகவுடன் இணைவேன் என அர்த்தம் இல்லை.
தமிழகத்தில் உள்ள 75, 50 ஆண்டு கால கட்சிகளுக்கு இணையாக அமமுகவின் கட்டமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். எங்கள் இலக்கை அடையும் வரை உறுதியாக இருப்போம். அதிமுகவுடன் இணைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கோ, நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ கிடையாது. 2026 தேர்தலில் அமமுக உறுதியாக முத்திரை பதிக்கும்” என்றார் தினகரன்.