சென்னை: விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாய் கருத்தடை மையம் அமைக்க தடை கோரிய வழக்கில், சென்னை மாநகராட்சி 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள கண்ணப்பர் திடலின் ஒரு பகுதியில் நாய் கருத்தடை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அன்னை கல்வி மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளை நிறுவனர் சிவ குணசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை, வேறு எந்த வித பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனால், கண்ணப்பர் திடலில் நாய் கருத்தடை மையம் அமைக்கும் மாநகராட்சியின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சி தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையம் அமைக்கப்படுகிறது என்றும், விளையாட்டு மைதானம் முழுமையாக மாற்றப்படவில்லை, அதன் ஒரு பகுதியான 6 ஆயிரம் சதுர அடியில் மட்டுமே நாய் கருத்தடை மையம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.