மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுக்கு பொறுப்பேற்று மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், மாநகர அதிமுக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியவது: “மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத மேயரின் கணவர் சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவர் செய்த முறைகேடுகளுக்கு மாநகராட்சி மேயர்தானே காரணம். அவர் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும். அவர் பதவி விலகாததால், அவர் பதவி விலக வேண்டும் அல்லது தமிழக அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது.
கணவர் மீது குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், மேயர் இந்திராணி பதவியில் தொடர்வது அநீதியானது. நீதிக்கு புறம்பானது. தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சிகளில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை பதவி விலகச் செய்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதுபோல், மேயர் இந்திராணியை மாற்றிவிட்டு அவருக்கு மாற்றாக புதியவரை மேயராக கொண்டு வரலாம். அப்போதுதான் மதுரை மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும்.
தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அத்தனையிலும் வரி உயர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய ஒரு குழு அமைக்க வேண்டும் என நீதிபதிகள் வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளனர். வழிகாட்டுதல்களை கொடுத்த பின்னும் மேயர் பதவியில் நீடிப்பது வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது.
கணவர் தவறு செய்துள்ளதால் மனைவியிடமும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேயர் பதவியில் இருக்கும்போது இந்திராணியை விசாரித்தால் சரியாக இருக்காது. பதவி விலகிய பிறகு விசாரிப்பதுதான் முறையான நடவடிக்கையாக இருக்கும். சொத்துவரி முறைகேட்டில் அதிமுக தலையிட்டது என்ற ஒரே காரணத்திற்காக தற்போது முறைகேட்டில் தொடர்பில்லாத அதிமுக உறுப்பினர்களை விசாரிப்பதுபோல் போலீஸார் மிரட்டுகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி மதுரை வரும்போது உள்ளூர் அமைச்சர்கள் எங்கே போகப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகளால் நிலத்தடிநீர் நீர்மட்டம் உயர்ந்தது. புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம், புதிய பாலங்கள், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால்தான், தற்போது மதுரை, மதுரையாக இருக்கிறது. இந்த 2 அமைச்சர்கள் மதுரைக்கு இதுவரை என்ன செய்துள்ளனர். ஒன்றை குறிப்பிட்டு சொல்ல முடியுமா?” என்றார் செல்லூர் ராஜூ.