புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மருக்கு புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்கார் நியமனம் செய்யப்பட்டார். இவர் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் 40 ஆண்டு அனுபவமுள்ளவர்.
டாக்டர் சித்ரா சர்கார் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நோயியியல் நிபுணர். மேற்குவங்க மாநிலம் கல்யாணி எய்ம்ஸ் தலைவராக இப்போது பணியாற்றி வருகிறார். நரம்பியல் நோயியல், மூலக்கூறு புற்றுநோயியல் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்தவர். மருத்துவக் கல்வி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.
இந்தியாவில் அறிவியலில் பெண்கள் என்னும் என்ற தலைப்பில் 100 பேர் கொண்ட பட்டியலை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் அகாடெமி வெளியிட்டுள்ளது. அதில் ஒருவர் சித்ரா சர்கார். இந்தியாவில் நரம்பியல் அறிவியலில் பெண்கள் என்ற 3 பேர் கொண்ட பட்டியலை நரம்பியல் இந்தியா 2019 ஆம் ஆண்டில் வெளியிட்டது. அதில் ஒருவராகவும் இவர் இருக்கிறார். உலக சுகாதார அமைப்பின் சார்பில் கட்டிகளின் சர்வதேச வகைப்பாடு அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
ஜிப்மரின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சித்ரா சர்காரை புதுடெல்லியில் தற்போதைய ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நெகி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக அவர் கூறுகையில், “உலகப்புகழ் பெற்ற மருத்துவக் கல்வியாளர், ஆராய்ச்சியாளர், மருத்துவ நிபுணர் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் டாக்டர் சித்ரா சர்கார் தலைமையில் ஜிப்மர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத் துறைகளில் புதிய உயரங்களை எட்டும். ஜிப்மரை நாட்டின் முன்னணி மருத்துவக் கல்வி ஆராய்ச்சியில் சிறந்த சுகாதார சேவை மையமாக வலுப்படுத்தும்.” என்று குறிப்பிட்டார்.