ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று 30 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். அவர்களில் இருபது பேருக்கு 81 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கரில் சமீபத்திய மாதங்களில், அதிகளவில் மாவோயிஸ்டுகள் காவல்துறையிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று 9 பெண்கள் உட்பட 30 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். அவர்களில் 20 பேருக்கு 81 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார். மேலும், மாநில அரசின் மறுவாழ்வுக் கொள்கையின் கீழ், அவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய சத்தீஸ்கரின் துணை முதல்வர் விஜய் சர்மா, “பஸ்தர் பகுதியில் உள்ள பிஜப்பூரில், 30 நக்சலைட்டுகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சரணடைந்துள்ளனர். இதுவரையிலான சரணடைந்தவர்களில், மிகப்பெரிய எண்ணிக்கை இதுவாகும். சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு கொள்கை, வீரர்களின் துணிச்சல் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக இவர்கள் சரணடைந்துள்ளனர். நக்சலைட்டுகள் பொது நீரோட்டத்தில் இணைந்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஆகஸ்ட் 17 அன்று, கரியாபந்த் காவல்துறையினர் முன்னிலையில் நான்கு நக்சலைட்டுகள் சரணடைந்தனர். இதற்கிடையில், கடந்த திங்களன்று பிஜப்பூர் மாவட்டத்தின் தேசிய பூங்கா பகுதியில் நக்சலைட்டுகளால் நடத்தப்பட்ட ஐஇடி தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.