மும்பை: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும், இரண்டு பேரை காணவில்லை என்றும், அவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பால்கர் மாவட்டத்தின் விரார் கிழக்கில் உள்ள நான்கு மாடி கட்டிடமான ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேரை காணவில்லை அவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று வசாய் விரார் நகராட்சியின் கூடுதல் ஆணையர் சஞ்சய் ஹிர்வாடே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், பால்கரில் இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டியவரை இன்று வசாய் விரார் போலீஸார் கைது செய்தனர். இந்த கட்டிடத்தை கட்டியவர் 50 வயது நைலி சேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை முயற்சி மற்றும் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அவசர சேவைகள், தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் விரார் மற்றும் நலசோபராவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், கட்டிடம் இடிந்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.