புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புவதாக இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: “சமூகம் அதிகளவில் பிரிவினைகளை எதிர்கொண்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தல் அரசாங்கங்களால் மட்டுமே வருவதில்லை, மாறாக மதம், சாதி, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்க முயற்சிக்கும்போது, குடிமக்களிடமிருந்துதான் அச்சுறுத்தல் வருகிறது என்று நான் நம்புகிறேன். இந்தப் போக்கைத் தடுக்க இந்தத் தேர்தலில் போட்டியிட நினைத்தேன்.
நான் ஒரு தாராளவாத அரசியலமைப்பு ஜனநாயகவாதி. இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறேன்.
இப்போது வரை எனது கடமை அரசியலமைப்பை நிலைநிறுத்துவதாக இருக்கிறது. ஒரு நீதிபதி, துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் எடுத்துக் கொள்ளும் சத்தியப் பிரமாணத்துக்கு இடையிலான வேறுபாடு இதுதான். பாரதம் என்ற இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். தமிழ்நாட்டுக்கும் தெலுங்கானாவுக்கும் தனி குடியுரிமை கிடையாது. சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டிலோ அல்லது சுதர்ஷன் ரெட்டி தெலங்கானாவிலோ விரும்பி பிறக்கவில்லை. எனவே தெலங்கானா vs தமிழ்நாடு என்றெல்லாம் எதுவும் இல்லை” இவ்வாறு சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்த நிலையில், அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு போட்டி இருக்கும் பட்சத்தில், செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மஹாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இண்டியா கூட்டணி வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.