சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் நேற்று முக்கிய சந்தைகளில் விற்பனை களைகட்டியது. விநாயகர் சிலை மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். விடுமுறையையொட்டி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, சென்னையின் கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகள் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. அதேநேரம், பொருட்கள் மற்றும் பூக்களின் விலையும் வழக்கத்தை விட அதிகரித்திருந்தது.
அதன்படி சாமந்தி பூ கிலோ ரூ.220-ல் இருந்து ரூ.400 வரையும், மல்லி ரூ.900 முதல் ரூ.1,300 வரையும், கோழிகொண்டை பூ கிலோ ரூ.140 முதல் ரூ.180 வரையும், அருகம்புல் 1 கட்டு ரூ.60 முதல் ரூ.80 வரையும், எருக்கம்பூ மாலை ரூ.60 முதல் ரூ.80 வரையும் விற்கப்பட்டது.
இதேபோல், சந்தைகளில் அவல், பொறி உள்ளிட்ட பொருட்களும் பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்பட்டன. பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்தன. ஆப்பிள் கிலோ ரூ.250, ஆரஞ்சு கிலோ ரூ.180 என சில்லறை கடைகளில் விற்கப்பட்டது.
விதவிதமான விநாயகர்: மேலும் ரூ.100 முதல் ரூ.1000 வரையிலான வண்ண வண்ண விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிந்திருந்தன. இவற்றை வீட்டில் வைத்து செய்து வழிபடும் வகையில் குழந்தைகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். எர்ணாவூர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் புலித்தோல் போர்த்திய விநாயகர், சுறாமீனுக்கு மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலைகள், சிக்ஸ் பேக் விநாயகர் என முன்பதிவு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் லோடு ஆட்டோக்களில் ஏற்றி அனுப்பப்பட்டன.
கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பதார்த்தங்களைச் செய்வதற்கான பொருட்களை வாங்க மளிகைக் கடைகளிலும் கூட்டம் குவிந்தது. குறிப்பாக மாலை நேரங்களில் இறுதி நேர வியாபாரம் களைகட்டியது. இவ்வாறு பொருட்களை வாங்கிச் செல்ல ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்த நிலையில், அலுவலகம் முடிந்து வீடு செல்வோர், பண்டிகைக்காக ஊர்களுக்குச் செல்வோர் என அணிவகுத்ததால் முக்கிய சாலைகளிலும், புறநகர் பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு, நெரிசலை சீர் செய்தனர்.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்கு வந்தவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாரத்தின் இடையில் விநாயகர் சதுர்த்தி வந்தபோதும், அதைத் தொடர்ந்து சுபமுகூர்த்த தினம் இருப்பதால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் பங்கேற்பதாக பலரும் விடுப்பு எடுத்து புறப்பட்டனர்.
முன்பதிவு செய்யாமல் வந்தவர்கள் பேருந்துக்காக காத்திருந்து பயணித்தனர். சென்னையில் இருந்து நேற்று இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை போக்குவரத்துத் துறையினர் மேற்கொண்டிருந்தனர்.
இதேபோல், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இங்கிருந்து இயக்கப்பட்ட ரயில்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அரசுப் பேருந்து, ரயில், ஆம்னி பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக சொந்த ஊர் சென்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.