கடலூரில் நாளை நடைபெற உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பட்டியலினத்தவர்கள் கலந்து கொள்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 28ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் பொதுக்கோவில் அல்ல எனக்கூறி கோவிலுக்கு நுழைய விடாமல் பட்டியலின மக்களை சில தனி நபர்கள் தடுப்பதாக கூறி அக்கிராமத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், கரும்பூர் முருகன் கோவில் பொது கோவில் தான், அனைவருக்கும் வழிபட உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, “எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கோவிலுக்குள் நுழைய அனைவரையும் அனுமதிக்க வேண்டும். அனைவரும் கடவுளிடம் தங்கள் பிரார்த்தனைகளை வைக்க அனுமதிக்கப் பட வேண்டும். நாளை நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். இதற்கு எவரேனும் இடையூறு செய்தால் காவல்துறை, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என உத்தரவிட்ட நீதிபதி, கோவில் கும்பாபிஷேகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.