புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவசம்,வைர கிரீடம் சாத்தப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 04.01 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம்,விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் வெளிநாட்டு பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வணங்கி வருகின்றனர் . விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் லட்டு உள்பட 9 வகை பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் விநாயகர் கோயிலில் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
விநாயகர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடைபெற்றது. சதுர்த்தியை முன்னிட்டு தனி நபர் அர்ச்சனை, விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு வழங்க 15 ஆயிரம் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டது. இத்துடன் சர்க்கரை பொங்கல், புளியோதரை உட்பட 9 வகையான பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு நடைசாற்றப்பட்டு, 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. இரவு 10 மணி வரை கோயிலில் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.