மதுரை: சமீபகாலங்களில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கு முக்கியக் காரணம், அந்த மாநில மொழி தெரியாத ஊழியர்கள் பணியில் இருப்பதே ஆகும் என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது விநியோகத் திட்டத்தில் உள்ள நிறைகுறைகள் சம்பந்தமாக கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது விநியோக திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், பொது விநியோகத் துறை அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த வாரம் தெற்கு ரயில்வேயில் ஊழியர்கள் பதவி உயர்வுக்கான ஒரு தேர்வு நடைபெற்றது. அதில் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகள் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான விதி. ஆனால் தெற்கு ரயில்வே நடத்திய அந்த பதவி உயர்வுக்கான தேர்வின் வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இருந்தது. தமிழ் மொழி இல்லை. தேர்வு நடந்து முடிந்துவிட்டது.
இந்த தேர்வுக்கு எதிராக ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள் தயாரித்து தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரியிருக்கிறேன். எனவே அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான முடிவு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கின்றேன். தொடர்ந்து நேற்று தெற்கு ரயில்வேயில் அடுத்த சுற்றறிக்கை வெளிவந்துள்ளது.
இந்தியில் பயிற்சி மற்றும் ஆளுமையை வளர்த்துக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மொழி பிரச்சினை என்பது அலு வலக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சமீப காலங்களில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கான முக்கிய காரணம், அந்த மாநில மொழி தெரியாத ஊழியர்கள் பணியில் இருப்பதே ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.