சிட்னி: தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
2006ல் முதன்முதலாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிளார்க், தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு தற்போது ஆறாவது முறையாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். 44 வயதாகும் அவர், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தளத்தில், “தோல் புற்றுநோய் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளது. இன்று எனது மூக்கு பகுதியில் மற்றொரு அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நேரத்தில் நீங்கள் உங்களது தோலை பரிசோதிக்க வேண்டியது அவசியம். நோய் வருமுன் காக்க வேண்டியது அவசியம். எனது விவகாரத்தில் தொடர் பரிசோதனை செய்ததால், புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடிந்தது. இதற்கு எனது மருத்துவர் தான் காரணம்” என கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 115 டெஸ்ட், 245 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் கிளார்க் விளையாடி உள்ளார். அதன் மூலம் 17,112 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாகவும் அவர் செயல்பட்டுள்ளார். அவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கடந்த 2015-ல் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2004 முதல் 2015 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடி உள்ளார். 2006-ல் அவருக்கு தோல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அது முதல் அவர் ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக தோல் புற்றுநோய் ஏற்படுவதாக தகவல். உலக அளவில் தோல் புற்றுநோய் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் அதிகம் ஏற்படுவதற்கு காரணமாகவும் அது அமைந்துள்ளது. மூன்றில் இரண்டு ஆஸ்திரேலியர்களுக்கு 70 வயதிற்குள் தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவது அந்த நாட்டில் வழக்கமாக உள்ளதாக தகவல்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன் கூட தோல் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். கடந்த 2013-ல் அவருக்கு முதல் முறையாக அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.