முசாபர்பூர்: ‘பாஜக எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். மக்களின் வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’ என பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று முசாபர்பூரில் நடைபெற்ற யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருடன் திறந்த காரில் சென்று மக்களை சந்தித்தார்.
இதனை தொடர்ந்து முசாபர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டுக்கு எதிராக என் சகோதரர்களுக்கு ஆதரளிக்கவே நான் வந்துள்ளேன். வாக்கு திருட்டை ராகுல் காந்தி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்கு தலைமை தேர்தல் ஆணையரால் முறையாக பதில் சொல்ல முடியவில்லை.
ஆனால், ராகுல் காந்தி உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையர் சொல்கிறார். இதற்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா?. ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும், கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது.
ராகுல் காந்தி அரசியலுக்காக பேச மாட்டார், உண்மையை கவனத்தோடு பேசுவார். பாஜக எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில்தான் பாஜக இப்படி நடந்துகொள்கிறது. மக்களின் வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்.
பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்ற பயத்தில் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. பிஹார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை விட பயங்கரவாதம் இருக்கமுடியுமா?. ராகுலும், தேஜஸ்வியும் பெறப்போகும் வெற்றியை தடுக்க முடியாத பாஜக, கொல்லைப்புறம் வழியாக வாக்காளர்களை நீக்குகிறது. இப்போது இந்தியாவே பிஹாரை பார்த்துக்கொண்டிருக்கிறது. பிஹார் மக்களின் பலம், ராகுலும், தேஜஸ்வியும்தான்.
இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்காக போர்க்குரலை பிஹார் எழுப்பியுள்ளது. இதுதான் வரலாறு. இப்போது அதே பணியை ராகுலும், தேஜஸ்வியும் பிஹாரில் செய்கின்றனர். ராகுல், தேஜஸ்வி நட்பு, அரசியல் நட்பு அல்ல. உடன்பிறப்புகளின் நட்பு. ஜனநாயகம் காக்க ஒன்று சேர்ந்துள்ளனர். உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரப்போவது இந்த நட்புதான். தேர்தலுக்கு முன்பே உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால்தான் இந்த வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள்” என்றார்
பிஹார் பிரச்சாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ‘ பிஹார் வந்தடைந்தேன். மதிப்பிற்குரிய லாலு பிரசாத்தின் மண் கண்ணில் தீயுடன் என்னை வரவேற்கிறது. களவாடப்பட்ட ஒவ்வொரு வாக்கின் கனத்தையும் மண்ணில் உணர முடிகிறது.
அன்பு இளவல்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன், மக்களின் வலியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக மாற்றும் வாக்கு அதிகாரப் பயணத்தில் நானும் இணைந்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ பிஹார் மற்றும் வாக்காளர் அதிகார யாத்திரைக்கு சகோதரர் ஸ்டாலினை வரவேற்கிறேன். உங்கள் வருகை பிஹாரிலும் முழு நாட்டிலும் வாக்கு திருட்டுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை வலுப்படுத்துகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்