மருத்துவப் படிப்புகளைப் போலவே துணை மருத்துவப் படிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை; வேலை தரக்கூடியவை. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளுடன் கணிதம் அல்லது வேறு பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களும் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
பிசியோதெரபி: எலும்பு முறிவு, சதைப்பிடிப்பு, சுளுக்கு, மூட்டுவலி, நீண்ட கால உடல் உபாதைகள் போன்றவற்றுக்குச் சிகிச்சை அளித்து வலியைப் போக்குவதில் பிசியோதெரபிஸ்ட் களின் பங்கு மிகவும் முக்கியமானது. விளையாட்டுத் துறையிலும் பிசியோதெரபிஸ்ட்டு களுக்குத் தவிர்க்க முடியாத இடம் உள்ளது. பிசியோதெரபி பட்டப்படிப்பைப் படித்தவர்கள் மருத்துவமனைகளிலும் மருத்துவச் சிகிச்சை மையங்களிலும் வேலைவாய்ப்பைப் பெறலாம்.
இத்துறையில் சிறிது காலம் அனுபவம் பெற்று, தனியே பிசியோதெரபி மையங்களை நடத்து பவர்களும் இருக்கிறார்கள். பிசியோதெரபி படித்தவர்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. பிபிடி என்கிற இளநிலை பிசியோதெரபி பட்டப்படிப்பு காலம் நான்கரை ஆண்டுகள் (ஆறு மாத காலம் நேரடிப் பயிற்சி உள்பட). இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பைத் தொடரலாம்.
ஆக்குபேஷனல் தெரபி: மனநலம் சார்ந்த உடல் கோளாறுகளைச் சரிசெய்வதற் கான மருத்துவச் சிகிச்சை முறை தொடர்பானது ஆக்குபேஷனல் தெரபி படிப்பு. இயல்பான நிலையில் இல்லாதவர்களின் மாறுபட்ட நடத்தைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது குறித்ததுதான் இந்தப் படிப்பு.
உடல்ரீதியான குறைபாடுகள் காரணமாக அன்றாடப் பணிகளைச் செய்யச் சிரமப்படுபவர்களுக்கும், மனநலப் பிரச்சினைகளால் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி தேவைப்படும். பிஓடி என்கிற இளநிலை பிசியோதெரபி பட்டப்படிப்புக் காலம் நான்கரை ஆண்டுகள் (ஆறு மாத காலம் நேரடிப் பயிற்சி உள்பட). ஆக்குபேஷனல் தெரபி படிப்பைப் படித்தவர்களுக்கு மருத்துவமனைகள், மாற்றுத்திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள் போன்ற இடங்களில் வேலை கிடைக்கும்.
பார்மசி: பார்மசூட்டிகல் எனப்படும் மருந்தாளுமைத் தொழிலில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்தின் தன்மை, அதில் உள்ள வேதிப் பொருள்கள், அவற்றின் குணங்கள் எனப் பல்வேறு அம்சங்கள் பார்மசி படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும். பார்மசி டிப்ளமோ (D.Pharm) இரண்டு ஆண்டுப் படிப்பில் பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் சேர லாம். அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்துப்படித்த மாணவர்களும் சேரலாம்.
இதே போல பி.பார்ம். (B.Pharm) நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் சேர விரும்பு வோர் பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலப் பாடத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் (விலங்கியல் – தாவரவியல்) பாடங்களைப் படித்திருக்க வேண்டும். தற்போது பார்ம்.டி. (Pharm.D-Doctor of Pharmacy) என்கிற ஆறு ஆண்டுப் படிப்பு (ஓராண்டு இன்டர்ன்ஷிப் உள்பட) சில தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் உயிரியல் அல்லது கணிதப் பாடத்தைப் படித்திருக்க வேண்டும். பார்மசி டிப்ளமோ படித்தவர்களும் பார்ம்.டி. படிப்பில் சேரலாம். ஆனால், அந்த மாணவர்கள் பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இப்படிப்பில் சேர்க்கப்படுவார்கள். அதாவது, அந்த மாணவர்களும் 6 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
இந்திய பார்மசி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பி.பார்ம் படித்த மாணவர்கள் பார்ம்.டி (Pharm.D-Post Baccalaureate) படிப்பில் சேரலாம். இந்த மாணவர்கள் பார்ம்.டி. படிப்பில் நான்காம் ஆண்டில் சேர்க்கப்படுவார்கள். அவர்களது படிப்புக் காலம் மொத்தம் 3 ஆண்டுகள். அதில் ஓராண்டு நேரடிப் பயிற்சியும் (இன்டர்ன்ஷிப்) இருக்கும்.
பார்மசி படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்ற வர்கள் பார்மசூட்டிக்ஸ், பார்மகாலஜி, பார்மசூட்டி கல் கெமிஸ்ட்ரி, கிளினிக் கல் பார்மசி, பார்மசூட்டிகல் அனாலிசிஸ் அண்ட் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் போன்ற சிறப்புப் பாடப் பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம். பார்மசி படிப்பைப் படித்தவர்கள் அரசு / தனியார் மருத்துவமனை களில் மருந்தாளுநராகப் பணியாற்றலாம்.
அத்துடன், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிலும் மருத்துவ ஆய்வு நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். சொந்தமாக மருந்துக் கடை வைக்க விரும்புபவர்கள் பார்மசி படிப்பைப் படித்திருக்க வேண்டியது அவசியம். டிரக் இன்ஸ்பெக்டர் பணியில் சேருவதற்கு பார்மசி படித்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களில் மருந்துகளை விற்பனை செய்யும் பிரதிநிதியாகப் பணிசெய்யும் பார்மசி மாணவர்களும் உண்டு.
– pondhanasekaran@yahoo.com