சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த கர்நாடக முதல்வருக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்து வரும் நிலையிலும், மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது ஏனென்றே தெரியவில்லை என கர்நாடக சட்டப்பேரவையில், அம்மாநில முதல்வர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
இது தமிழகத்துக்கு எதிராக, கர்நாடக மக்களை தூண்டிவிடும் செயலாகும். தமிழகத்துக்கு எந்த மாதங்களில், எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை பல்வேறு தொழில்நுட்பக் குழுக்கள் மூலம் ஆய்வு செய்தே உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய பங்கீட்டு நீரை தீர்ப்பாக அளித்தது.
அதை அலட்சியப்படுத்திவிட்டு, எப்போதெல்லாம் கர்நாடக அணைகள் நிரம்புகிறதோ, அப்போது மட்டும் வெள்ளப் பாதிப்பிலிருந்து தன் மாநிலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விடுகிறது கர்நாடக அரசு. அப்போது தமிழகத்திலும் மழைபொழியும் காலம் என்பதால், அது தமிழகத்துக்கு கூடுதல் அழிவைத்தான் தருகிறது.
அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே 182 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு வந்துள்ளது. அதாவது ஓராண்டில் கொடுக்க வேண்டிய நீரை 81 நாட்களில் திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு விவரம் அறியாமல் அணை கட்டுவதை தடுப்பதாக அம்மாநில முதல்வர் கூறுகிறார். தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் கர்நாடக அரசின் சூட்சமத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீரை திறந்துவிடாத கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்டிவிட்டால், காவிரியின் உபரி நீரும் தமிழகத்துக்கு கிடைக்காது. 20 ஆண்டுகள் கடந்தும் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காக கர்நாடக அரசை எப்படி நம்ப முடியும்? சுய அதிகாரம் கொண்ட மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் அணைகளை எடுத்துக்கொண்டு, நீர் பங்கீடு செய்யும் வழிமுறைக்கு கர்நாடக அரசு உரிய ஒப்புதல் அளித்தால் இரு மாநில மக்களும் பயன்பெறுவர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.