கோவை: விநாயகர் சதுர்த்தியையொட்டி 4 டன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு புலியகுளம் முந்தி விநாயகர் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (ஆக.27) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரசித்தி பெற்ற, ஒரே கல்லால் செய்யப்பட்ட பிரம்மாண்ட விநாயகரான புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகவேள்வி தொடங்கி சிறப்பு மகா அபிசேகம் நடைபெற்றது.
இதில் 16 வகையான பல்வேறு வாசனை திரவியங்களல் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முந்தி விநாயகருக்கு சுமார் 50 கிலோ எடையில் சந்தன காப்புடன் 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யபட்டது. விநாயகருக்கு பிடித்த பலகாரங்களான கொழுக்கட்டை, அதிரசம், முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு பலகாரங்கள்லுடன் மகா தீபராதனை நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனமுருகி வேண்டி வணங்கினர்.
அதேபோல், பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், கணபதி மாநகரில் உள்ள, வெற்றி விநாயகர் திருக்கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அதிகாலை 108 சங்குபூஜை கணபதி ஹோமம், பெருவேள்வி நடைபெற்றது. 108 சங்கு தீர்த்தம் மற்றும் புண்ணிய நதிகளின் தீர்த்த்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து லட்சார்ச்சனை, மகா அன்னதானம் நடைபெற்றது. சரவணம்பட்டியில், சிவகாமியம்மன் உடனுறை சிரவணமாபுரீசுவரர் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.