சென்னை: சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அக்
கல்லூரியின் டீன் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜன் நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை வேப்பேரியில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் டீனாக இருந்தவர் மருத்துவர் சி.சவுந்தரராஜன். இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை நல கல்வி மையத்தில் சுமார் ரூ.5 கோடி வரை டீன் சவுந்தரராஜன் முறைகேடு செய்திருப்பதாக, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திடம் மையத்தின் இயக்குநர் புகார் அளித்தார்.
அதன்பேரில் முதல்கட்ட விசாரணை நடத்திய நிர்வாகம், டீன் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜனை நீக்கியுள்ளது. மேலும், 5 அதிகாரிகள் துறைக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி டீன் உட்பட யாரும் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. டீன் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் கல்லூரியில் பேராசிரியராக தொடருவார். அதேபோல், 5 அதிகாரிகள் துறைக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள குழு, அறிக்கை சமர்ப்பித்த பிறகே, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். இதற்கிடையே, கால்நடை மருத்துவக் கல்லூரி டீனாக (பொறுப்பு) மருத்துவர் எஸ்.சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.