சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக, இந்து முன்னணி உள்பட 65-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் மற்றும் குடியிருப்புவாசிகள், இளைஞர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட போலீஸாரிடம் அனுமதி கோரியிருந்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 35,000 சிலைகளை வைத்து வழிபட போலீஸார் அனுமதி வழங்கினர். சென்னையைப் பொறுத்தவரை 1,500 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
நிறுவப்படும் சிலையின் உயரமானது 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது, பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும், மதவாத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று இரவில் 35,000 சிலைகளும் நிறுவப்பட்டன. அனைத்து சிலைகளுக்கும் தலா ஒரு போலீஸார் வீதம் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வரும் 30, 31-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
சென்னையில், பட்டினப்பாக்கம் சீனிவாச நகர், பாலவாக்கம் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் சென்னையில் 16 ஆயிரம் போலீஸார் உட்பட, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உளவுப் பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிலைகளுக்கு இன்று முதல் பூஜைகள் நடைபெற உள்ளன.