இந்தூர்: இஸ்ரேலின் அயர்ன் டோம் போல், இந்தியாவின் சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்படும் என முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது எதிர்காலத்தில் போர் மூண்டால், குஜராத்தின் ஜாம்நகர் எல்லைப் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் சமீபத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய இடங்களை, எதிரி நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார். இதற்கு சுதர்சன சக்கரம் என பெயரிடப்படவுள்ளது.
இத்திட்டம் குறித்து இந்தூரில் உள்ள ராணுவ போர் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் பேசியதாவது: சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு அமைப்பில் முப்படைகளைச் சேர்ந்த ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வலுவான பாதுகாப்பு கவசம் உருவாக்கப்படும். இதை உருவாக்க ஒட்டுமொத்த நாட்டின் அணுகுமுறையும் தேவை. இது இஸ்ரேலின் அயர்ன் டோம் போல, அனைத்து கால நிலைகளிலும், நாட்டை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக இருக்கும்.
இதற்காக தரைவழி, வான் வழி, விண்வெளி கடல் வழி, கடலுக்கு அடியில் உள்ள சென்சார்களை ஒருங்கிணைத்து உளவுத் தகவல், கண்காணிப்பை ராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். சுதர்சன சக்கரம் வான்பாதுகாப்பு திட்டத்துக்கு முப்படைகளில் உள்ள பல கருவிகளை ஒருங்கிணைக்க மிகப் பெரிய முயற்சிகள் தேவை.
இத்திட்டத்துக்கு செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட கணினி செயல்பாடு, தரவு மற்றும் தரவு பகுப்பாய்வு, குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை பயன்படுத்த வேண்டும். சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு திட்டம் 2035-ம் ஆண்டுக்குள் அமல்படுத்தப்படும். இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.