மதுரை: மதுரை மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்வதால், அவரது இந்த பயணம் வெற்றி பெற முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்தார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து 4 நாட்களுக்கு மதுரையில் பிரச்சாரப் பயணம் செய்யவுள்ளார். அவரின் இந்த சுற்றுப் பயணம் வெற்றி பெறுவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், இபிஎஸ் சுற்றுப் பயணத்துக்கான அழைப்பிதழை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள வணிக வளாகங்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொது மக்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கி அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் கே.ராஜூ பேசுகையில், ”மதுரையில் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுப் பயணம் செய்கிறார். இதற்காக மதுரையை ஆளும் மீனாட்சி அம்மன் கோயிலில் மங்கையர்கன்னி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு அழைப்பிதழ்களை வழங்கி சாமி தரிசனம் செய்துள்ளோம். அவரது இந்த பயணம் வெற்றி பெற பூஜை செய்தோம்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மதுரை மாவட்டத்துக்கு ரூ.8,000 கோடிக்கு மேல் திட்டங்களை வழங்கி இருக்கிறார். மதுரையில் முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தற்போது மக்கள் 24 மணி நேரமும் குடிநீர் பெறும் நிலை வரவுள்ளது. அவரது சுற்றுப் பயணத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள்” என்று செல்லூர் ராஜூ கூறினார்.