மதுரை: மதுரை மாநகராட்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்களின் சொத்து வரியை மறு ஆய்வு செய்ய வார்டுக்கு ஒரு குழு வீதம் நூறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ரவி, மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கின் விசாரணையை தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு படைக்கு மாற்றி உத்தரவிட்டது.
பின்னர், மதுரை மாநகராட்சியில் அனைத்து கட்டிடங்களின் சொத்து வரியை மாநகராட்சி ஊழியர்கள், வருவாய்த் துறையினர் அடங்கிய குழுவை கொண்டு மறு ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பான செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் சார்பில் செயல் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் அரசின் உத்தரவின் பேரில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சொத்து வரி மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சியில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நூறு வார்டுகளிலும் 21,025 காலியிடம், 13,384 குடியிருப்பு கட்டிடங்கள், 3,503 வணிக கட்டிடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சியின் வரி வருவாய் ரூ.19.30 கோடி அதிகரித்துள்ளது.
இந்த வழக்கிற்கு பிறகு ஜூலை மாதம் மாநகராட்சியில் வணிக கட்டிடங்களை ஆய்வு செய்த போது 69 கட்டிடங்களுக்கு குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைக்கான வரி நிர்ணயம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கட்டிடங்களுக்கு கூடுதலாக ரூ.76.15 லட்சம் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி வரி வருவாய் 2022-ம் ஆண்டு முதல் ரூ.5.55 கோடி அதிகரித்துள்ளது. மதுரை கே.கே.நகரில் 190 குடியிருப்பு கட்டிடங்கள் வணிக கட்டிடங்களாக பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கட்டிடங்களின் வரி ரூ.3.36 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுபடி வார்டுக்கு ஒரு குழு வீதம் தலா வரி வசூலாளர், குரூப் 3 அலுவலர், தொழில்நுட்ப அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் அடங்கிய நூறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முதல் கட்டத்தில் 40,261 வணிக கட்டிடங்கள், 2,315 தொழிற்சாலை கட்டிடங்கள், 317 தனியார் கல்வி கட்டிடங்கள், 23,101 குடியிருப்பு கட்டிடங்கள் என 65,994 கட்டிடங்களை ஆய்வுக்கு உட்படுத்தும். இந்த கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பை சரி செய்ய குறைந்தபட்சம் 6 மாதம் அவகாசம் தேவை.
இரண்டாம் கட்டமாக நூறு ரூபாய்க்கு கீழ் வரி விதிக்கப்பட்டுள்ள 37,332 கட்டிடங்கள், ரூ.200-க்கு கீழ் உள்ள 29,401 கட்டிடங்கள், ரூ.500-க்கு கீழ் 67,688 கட்டிடங்கள், ரூபாய் ஆயிரத்துக்கும் கீழ் 61,661 கட்டிடங்கள் என மொத்தமாக 1,96,082 கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களின் வரி விதிப்பு மறு ஆய்வு பணி முடிய நான்கு மாதம் தேவை. வரி விதிப்பு மறு ஆய்வு பணியை சிறப்பாக மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள், உதவி வருவாய் அலுவல்கள், நிர்வாக பிரிவு அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஒருங்கிணைந்த நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி மண்டல அளவில் உதவி ஆணையர் மேற்பார்வையில் வட்டாட்சியர் அந்தஸ்திலான உதவி வருவாய் அலுவலர், இளநிலை பொறியாளர் அடங்கிய துணைக்குழு அமைக்க முடிவானது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக 11 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழு துணைக்குழுவை கண்காணிக்கும். 11 பேர் குழுவும், துணைக்குழுவும் துணை ஆணையர் (வருவாய்) மேற்பார்வையில் செயல்பட்டு மாநகராட்சி ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்யும்.
இந்த ஆய்வின் போது கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு தொடர்பான தரவுகளும் சேகரிக்கப் படும். இதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு அதில் அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். இப்பணி முடிந்தும் சட்டப்படியான நடவடிக்கை தொடரும். 3 லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்களை மறு ஆய்வு செய்ய வேண்டியதுள்ளதால் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பு முறைகேட்டை தொடர்ந்து வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய மதுரை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நீதிமன்றத்துக்கு திருப்தி அளிக்கிறது. இந்த நடவடிக்கையை நீதிமன்றம் பாராட்டுகிறது. இந்த நடைமுறையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் பின்பற்றி சரியான சொத்து வரி விதிப்பை உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த முறைகேடு வழக்கை காவல் துறை சிறப்புப் படை முறையாக தொடர்ந்து விசாரிக்க வேண்டும். விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். ஆய்வு நடவடிக்கை மற்றும் முன்னேற்றம் குறித்து மதுரை மாநகராட்சி தரப்பில் அறிக்கை அக். 27ல் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.