ஸ்ரீநகர்: ஜம்முவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் புனித யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நதிகளான தாவி மற்றும் ராவியில் வெள்ளம், அபாய அளவுக்கு மேல் செல்கிறது. கதுவாவில் ராவி நதியை ஒட்டிய தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தோடா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் அத்குவாரி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர். இதனால் இக்கோயிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அங்கு மீட்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது.
நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மற்றும் தோடா – கிஸ்துவாரை தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் வெள்ள நிலவரம் மற்றம் தயார் நிலை குறித்து முதல்வர் உமர் அப்துல்லா ஆய்வு செய்தார்.