திருப்பத்தூர்: ஆம்பூர் கலவர வழக்கில் இன்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு நாளை மறுநாள் (ஆக.28) அறிவிக்கப்படும் என தள்ளிவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (25). பள்ளிகொண்டாவில் தோல் பதனிடும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி மாயமானார். அவரை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனி மனுதாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் விசாரணை நடத்தினார். மேலும், பவித்ரா மாயமானது தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவர் பிடித்து விசாரணை நடத்தினார். 2015-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி ஷமீல் அகமதுவை இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், அங்குள்ள காவலர் குடியிருப்பு ஒன்றில் அடைத்துவைத்து விசாரித்தார். அப்போது, தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், விசாரணையில் இருந்த ஷமீல் அகமதுவை போலீஸார் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு உறவினர்கள் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் ஷமீல் அகமது, ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனையிலும், அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷமீல் அகமது உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஆம்பூரில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஆம்பூர் நகர காவல் நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். ஷமில் அகமதுவ தாக்கிய காவல் ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். பின்னர், ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சபாரத்தினம், காவலர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். இதில், காவல் துறையினரின் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
ஷமில் அகமது மரணம் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டனர். ஷமில் அகமது மரணத்துக்கு காரணமான போலீஸாரை கைது செய்து, பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்துகள், லாரிகள், கார்கள் மற்றும் வாகனங்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
கற்கள் வீசப்பட்டதால் வாகனங்கள் சேதமடைந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு ஓட்டுநர்கள் தாக்கப்பட்டதால் போராட்டம் கலவரமாக மாறத்தொடங்கியது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்ட காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது, கலவரக்காரர்கள் காவலர்களை நோக்கி கற்களை வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் எஸ்.பி.செந்தில்குமாரி மீது கற்கள் வீசப்பட்டதால் அவர் லேசாக காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆம்பூர் கலவர பூமியாக மாறியது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதில் 15 பெண் காவலர்கள் உள்பட 54 காவலர்கள் படுகாயமடைந்தனர். அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆம்பூர் கலவரத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டது.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போர்க்களமாக மாறியது. குறைந்தளவே காவலர்கள் இருந்ததால் அவர்கள் பின்வாங்க வேண்டிய நிலை உருவானது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் காவலர்கள் திணறினர். ஆம்பூர் கலவரம் காரணமாக வேலூரிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் தவித்தனர்.
இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய 191 பேர் மீது காவல் துறையினர் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 100-க்கும் மேற்பட்டோரை காவல்
துறையினர் கைது செய்து வேலூர், கடலூர், சேலம் மத்திய சிறைகளில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் கைதான 118 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் தீர்ப்பு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆக.26) வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சியாமளாதேவி (திருப்பத்தூர்), மயில்வாகனன் (வேலூர்) ஆகியோர் தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் குவிக்கப்பட்டனர்.

ஆம்பூர், வாணியம்பாடி பேருந்து நிலையங்களில் காவலர்கள் பெரும் அளவு குவிக்கப்பட்டனர். திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்திலும் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூர் நீதிமன்றத்துக்கு வழக்கின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ள தனித்தனி வாகனங்களில் வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பகல் 12 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆம்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஆக.28-ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகும் எனக்கூறி நீதிபதி மீனாகுமாரி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனால், ஆம்பூரில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்தது. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டாலும், ஆம்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.