பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாடியது சர்ச்சையானது. இந்நிலையில், தன்னை காந்தி குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விஸ்வாசி என அவர் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார், ஆர்எஸ்எஸ் பாடல் சர்ச்சை மற்றும் தன் மீதான விமர்சனத்துக்கு விளக்கம் கொடுத்தார்.
“சில தினங்களுக்கு முன்னர் பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலின் மூன்று வாக்கியத்தை நான் பாடி இருந்தேன். அதன் மூலம் ஐபிஎல் போட்டி தொடர்பான பிரச்சினை சார்ந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசோகாவை பங்கேற்க செய்ய முயற்சித்தேன். ஏனெனில், எனது நண்பர்கள் சிலர் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
நான் காங்கிரஸ் கட்சிக்காரனாக பிறந்தேன். அப்படியே தான் உயிர் பிரிவேன். காந்தி குடும்பத்தை யாரேனும் கேள்வி கேட்பதை அனுமதிக்க முடியாது. எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனால், இதை அரசியல் அழுத்தம் காரணமாக செய்யவில்லை. எனது கட்சியின் சகாக்கள் சிலர் இது தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை நான் விரும்பவில்லை.
காந்தி குடும்பத்தினரே எனது தெய்வம். நான் அவர்களின் பக்தன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் எனது பயணம் மிகவும் நீண்டது. 100 காங்கிரஸ் பவனை நிறுவ உள்ளோம். அது எங்கள் கட்சியின் கோயில். நான் எனது கட்சியின் வரலாற்றில் நிலைத்திருக்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம்” என அவர் கூறினார்.
ஆர்எஸ்எஸ் பாடல்: அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி பெங்களூரு நெரிசல் மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசுகையில், ‘‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே” என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடினார்.
மேலும் அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகாவும் நானும் ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து ஒன்றாக செயல்பட்டோம். ஆனால் இப்போது வேறு கட்சிகளில் இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் அந்த அமைப்பின் பாடலை பாடியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடலை பாடும் வீடியோவை ராகுல் குடும்பத்தினர் பார்த்தால் கோமா நிலைக்கு சென்றுவிடுவார்கள். காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து இல்லை என இதன் மூலம் தெளிவாகிறது’’ என கூறியிருந்தார்.