மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் அதிகாரிகள், கவுன்சிலர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குள் இப்பிரச்சினைக்கு திமுக மேலிடம் தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், வரி விதிப்புக் குழுவின் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், 2 உதவி ஆணையர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மண்டலத் தலைவர்கள் 5 பேர், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவியும் பறிக்கப்பட்டது. ஆனால், கணவர் கைது செய்யப்பட்ட நிலையிலும் மேயர் பதவியில் தொடர்வது, அவருக்கும், மாநகராட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்த வேகம், தற்போது அதிமுகவிடம் இல்லை. மேயர் மாற்றத்துக்கு குரல் கொடுப்பதில் அதிமுக தரப்பு அமைதி காப்பது திமுகவினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘‘திமுகவில் மேயர் இந்திராணியை மாற்ற முடிவு செய்து அவருக்கு பதிலாக புதியவரை தேர்வு செய்யும் பொறுப்பை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வசம் ஒப்படைத்துள்ளது. அவரும், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர் தளபதி, மணிமாறன் ஆகியோரை அழைத்து பேசியுள்ளார். இதில், சுமுக முடிவு தற்போது வரை ஏற்படாததால் மேயர் மாற்றம் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.
அமைச்சர் பி.மூர்த்தி முன்னாள் மண்டலத் தலைவர் வாசுகியையும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும் 61-வது வார்டு கவுன்சிலர் செல்வியையும், மாவட்ட செயலாளர் மணிமாறன், 95-வது வார்டு கவுன்சிலர் இந்திராகாந்தியையும் பரிந்துரை செய்துள்ளனர்.
தளபதியும், பழனிவேல் தியாகராஜனும், இந்திராணியை மாற்றும்பட்சத்தில் அவரது சமூகத்தை சேர்ந்த செல்வியை மேயராக நியமிக்கும்படி முறை யிடுகின்றனர். உளவுத்துறை போலீஸார் மூலமும், திமுக மேலிடம், மேயராக யாரை தேர்வு செய்யலாம் என்று ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
செப்.1-ம் தேதி முதல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மதுரை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, அவர் உறுதியாக மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தை கிளப்பி, மேயரின் கணவர் சிறையில் இருப்பதை குறிப்பிட்டு பேச வாய்ப்புள்ளது.
அவரது பேச்சின் வீரியத்தை பொருத்து, மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரம் மதுரையை தாண்டி மாநிலம் முழுவதும் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தலாம். இதற்குள் சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் திமுக மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் இந்த விவகாரத்தால் திமுக மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்படும். அதற்கு முன்பாகவே மேயரை மாற்றினால், தவறு செய்யும் யார் மீதும் நடவடிக்கை பாயும் என்ற கட்சியின் கண்டிப்பையும், தோற்றத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடலாம்.
மேயர் மாற்றத்தால், மாநகர் திமுகவில் குளறுபடிகளும், கோஷ்டிப் பூசலும் அதிகரிக்கும் என திமுக கருதினால், மேயர் மாற்றத்தை தள்ளி வைக்கலாம்’ என்றனர். மேயர் இந்திராணியே பதவியில் தொடர்வாரா? என்ற குழப்பத்தில், மாநகராட்சி நிர் வாகத்தில் அதிகாரிகள், கவுன்சிலர்கள் அன்றாட மக்கள் வளர்ச்சிப் பணிகளில் முழு கவனத்தோடு செயல்பட முடி யாமல் தவிக்கின்றனர்.