வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 50% ஆக உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை அமல்படுத்துவதற்கான வரைவு அறிவிப்பை அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
50 சதவீத வரிவிதிப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 6, 2025 அன்று “ரஷ்யவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்தல்” என்ற தலைப்பில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட நிர்வாக ஆணை 14329-ஐ அமல்படுத்தும் வகையில் கூடுதல் வரிகள் விதிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில், இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கான புதிய வரி விகிதம் பற்றி விளக்கமாக குறிப்பிட்டுள்ளது.
நாளை (ஆகஸ்ட் 27) அமலாக உள்ள இந்த வரைவு அறிவிப்பில், நிர்வாக உத்தரவுக்கு ஏற்ப அமெரிக்காவின் இணக்கமான கட்டண அட்டவணையை (HTSUS) மாற்றியமைக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய வரிகள் ஆகஸ்ட் 27 அன்று நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை 30, 2025 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளை அறிவித்தார். “இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே செய்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. அவர்கள் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடுமையான வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளனர்.
மேலும், அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளனர். அவர்கள் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வாங்குபவராக உள்ளனர். இந்த நேரத்தில் ரஷ்யா உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எனவே ஆகஸ்ட் 1 முதல் இந்தியா கூடுதலாக 25% வரியை செலுத்தும்” என்று அவர் தெரிவித்தார்.
நாளை முதல் அமலுக்கு வரும் இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50% வரி குறித்து பேசிய பிரதமர் மோடி, “எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதைத் தாங்கும் வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம். இன்று, ஆத்மநிர்பர் பாரத் அபியான் மூலம் குஜராத்திலிருந்து நிறைய மின்சார ஆற்றலைப் பெறுகிறோம். இதற்குப் பின்னால் 20 ஆண்டுகால கடின உழைப்பு உள்ளது” என்று நேற்று அகமதாபாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.