சென்னை: விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாளை விநாயகர் சதுர்த்தி, அதைத் தொடர்ந்து சுபமுகூர்த்த நாட்கள், பின்னர், வார இறுதிநாட்கள் என அடுத்தடுத்து விடுமுறை வருகிறது.
இதனால், பொது மக்கள் தேவைக்காக கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி, இன்று (26-ம் தேதி), வரும் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,945 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 200 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 24 பேருந்துகளும் இயக்கப்படும்.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து 350 பேருந்துகள் என மொத்தம் 3,519 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நாட்களில் ஊர்களுக்குச் செல்ல 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஊர் சென்றவர்கள் திரும்பி வரவும் ஞாயிறன்று கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.