புதுடெல்லி: லாபம் பெறுவதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் உண்டு. இதற்காக அவர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆலோசனை பெறுவது வழக்கம். இதைப் பயன்படுத்தி உ.பி.யின் வாராணசியிலிருந்து ஒரு கும்பல் இலவச ஆலோசனை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்காக, அந்த கும்பல் உ.பி.யின் வாராணசியில் இரண்டு கால்சென்டர்களையும் நடத்தி வந்துள்ளது. இவர்கள் காட்டிய ஆசை வலையில் வீழ்ந்தவர்கள் தங்களது வங்கி மற்றும் டீமேட் கணக்குகளின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் அவர்களுக்கு லாபம் காட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு, அவர்களை ஏமாற்றி வங்கியிலிருந்து தொகைகளை தமது வேறு வங்கிக் கணக்குகளுக்கு மோசடி நபர்கள் மாற்றிக்கொண்டனர்.
தேசிய அளவில் புகார்: இதன் பிறகு ஏமாந்த முதலீட்டாளர்களின் செல்போன் எண்களை பிளாக் செய்துள்ளனர்.இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் என்சிசிஆர்பியில் (தேசிய சைபர் கிரைம் புகார் தளம்) தமது புகார்களை பதிவு செய்துள்ளனர். இதுபோல் தேசிய அளவில் பதிவாகும் புகார்களை தரம் பிரித்து குற்றச்செயல்கள் நடைபெற்ற மாநிலங்களுக்கு என்சிசிஆர்பி அனுப்பி வைக்கிறது.
இந்த வகையில், உ.பி. மாநில காவல் துறைக்கு கிடைத்த 27 புகார்களின்படி, மோசடி தளம் வாராணசியாக இருந்துள்ளது. சுமார் ரூ.5 கோடி தொகை, பங்குச்சந்தை முதலீட்டின் பெயரில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால், வாராணசி சம்பந்தப்பட்ட 27 புகார்களை விசாரிக்க அந்நகரக் காவல் துறைக்கு சைபர் பிரிவு அனுப்பியது. இதற்காக வாராணசி காவல் துறையின் துணை ஆணையரான தமிழர் டி.சரவணன் தலைமையில் ஒரு படை விசாரணையைத்துவங்கியது.
90 வங்கி கணக்குகள் முடக்கம்: இப்படையினர் நேற்று முன்தினம், வாராணசியின் சிக்ரா, சேத்கஞ்ச் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது 2, 3 அடுக்கு மாடி வீடுகளில் இருந்த 14 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் கைதாகி உள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை சுமார் 90 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் வாராணசியின் துணை ஆணையர் டி.சரவணன் கூறும்போது, ‘‘இந்த வழக்கில் மேலும் 200 பேரைத் தேடி வருகிறோம். இதுவரை ரூ.33 லட்சம் தொகை வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலின் தலைவனாக, பல்வேறு விருதுகள் பெற்ற பங்கு சந்தை நிபுணரான அம்பர் மவுரியா உள்ளார்.
தலைமறைவான அவரை தேடி வருகிறோம். இவர், 2 வருடங்களாக பங்குச்சந்தை பயிற்சி எனும் பெயரில் இளம் பட்டதாரிகளுக்கு வலை விரித்துள்ளார். இந்த 27 புகார்களில் 4 தமிழ்நாட்டிலிருந்து செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பல், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மோசடி செய்து உள்ளது’’ என்றார்.