புதுடெல்லி: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது.
அதன்படி ஆண்டுதோறும் எம்பிபிஸ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களில் வேறு மாணவர்களை சேர்த்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் என்ஆர்ஐ மாணவர்கள் பலர் உண்மையில் வெளி நாட்டினர் இல்லை என்று பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகள் மத்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் உதவியுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கான 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கையில் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏஜென்டுகளுக்கு பணம் கொடுத்து போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். அதன்படி, என்ஆர்ஐ மாணவர்கள், அவர்களுடைய குடும்ப பின்புலம் போன்றவை குறித்து போலியாக ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். குறிப்பாக தூதரக ஆவணங்கள், என்ஆர்ஐ என்பதற்கான ஆவணங்களை ஏஜென்டுகள் தயார் செய்துள்ளனர்.
இந்த மோசடியில் உண்மையான என்ஆர்ஐ மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். சட்டப்படி இந்தியாவில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் மாணவருக்கு, என்ஆர்ஐ உறவினர்தான் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், என்ஆர்ஐ மாணவர் சேர்க்கையில் என்ஆர்ஐ குடும்பத்தினர் கட்டணம் செலுத்தவில்லை என்பதும் உள்ளூரில் இருந்தே பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுபோல் என்ஆர்ஐ ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் சேர்க்கையில் மோசடி நடைபெறுவது குறித்து கடந்த மாதமே மத்திய வெளியுறவுத் துறை ஆதாரப்பூர்வமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. தகுதியற்ற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்போது அறிவுறுத்தப்பட்டது.
எனினும், மேற்கு வங்க, ஒடிசா மாநில அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வங்கியில் வைத்துள்ள வைப்பு தொகை ரூ.6.42 கோடியை முடக்கியுள்ளது. இதேபோல் முறைகேட்டில் ஈடுபட்ட சில தனியார் கல்லூரிகளின் ரூ.12.33 கோடியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.