சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திட்டத்தின் 5-ம் கட்ட விரிவாக்கத்தால் 750 கூடுதல் சமையலறைகள் உருவாக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 3.05 லட்சம் மாணவ, மாணவியருக்கு முதல்வரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
காலை 8.30 மணிக்கு, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் விழாவில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசின் செய்தித் தொடர்பு அதிகாரியும், வருவாய்த்துறை செயலருமான பி.அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் காலை உணவுத்திட்டத்தில் 5-வது கட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே 4 கட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2022 மே 7 ம் தேதி 110 விதியின்கீழ் சட்டப்பேரவையில் முதல்வர், காலை உணவு திட்டத்தை அறிவித்தார்.
தொடர்ந்து அதே ஆண்டு செப்.15-ம் தேதி மதுரை, ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக, 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இதில் நகராட்சி, மாநகராட்சி, கிராமப்புறங்கள், மலைப்பகுதி பள்ளிகளில் சிலவற்றில் செயல்படுத்தப்பட்டது. நல்லமுறையில் செயல்பட்டதால், விரிவாக்கம் செய்யப்பட்டது.
கடந்த 2023 மார்ச் 1-ம் தேதி 433 பள்ளிகளில், 56,160 குழந்தைகள் பயன்பட்டனர். 2023 ஆக25-ல் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலமாக, மொத்தம் 30,992 பள்ளிகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டு 15.32 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றனர்.
3.05 லட்சம் குழந்தைகள்: அதன்பின் 4-ம் கட்டமாக, கிராமப்புறங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், 3,995 பள்ளிகளில் 2.21 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றனர். நான்கு கட்டங்களில் 34,987 பள்ளிகள் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு இதுவரை 17 லட்சத்து 53,257 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர்.
தற்போது கூடுதலாக 3.05 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இந்தத் திட்டமானது குறிப்பாக, பொதுமக்களிடமும், குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும், தாய்மார்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது மாநில திட்டக்குழுவின் ஆய்வின் மூலம் தெரியவந்தது.
குறிப்பாக, வகுப்பறைகளில் உன்னிப்பாக பாடங்களை கவனிப்பதுடன், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. கிச்சடி, உப்புமா போன்றவற்றுடன் காய்கறிகள் நிறைந்த சாம்பார் சேர்த்து வழங்கப்படுகிறது. இதனால் பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்கின்றனர்.
மேலும், தற்போது காலை உணவுத் திட்டத்தின்கீழ், சென்னையில் 35 சமையலறைகள், இதர இடங்களில் 32,375 இடங்களிலும் உணவு சமைக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்படுவதால், 750 சமையலறைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, காலை உணவுத் திட்டத்துக்கு மொத்தமாக 33,323 சமையலறைகளில் உணவு சமைக்கப்பட உள்ளது. இவ்வாறு வருவாய்த்துறை செயலர் பி.அமுதா தெரிவித்தார். உடன், சமூக நலத்துறை செயலர் ஜெயமுரளிதரன் இருந்தார்.