புதுடெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகிய 5 உறுப்பினர்களை கொண்ட உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று பிற்பகல் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் நீதிபதிகள் ஆலோக் ஆராதே, விபுல் எம்.பஞ்சோலி ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், குடியரசுத் தலைவர், இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிடுவார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக விபுல் எம்.பஞ்சோலி நியமிக்கப்பட்டால் அவர் 2031 மே மாதம் முதல் 16 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். 1964-ம் ஆண்டு பிறந்த நீதிபதி ஆராதே, மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009 டிசம்பரில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி பஞ்சோலி 7 ஆண்டுகள் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 2014 அக்டோபரில் குஜராத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2016 ஜூன் மாதம் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.