புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக் கில் இந்திய, சீன ராணுவ வீரர் களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. தரைவழி வர்த்தக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இரு நாடுகளும் வர்த்தகரீதியாக பரஸ்பரம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன்படி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உரங்கள், அரிய வகை தனிமங்கள், சுரங்கங்களை தோண்டும் இயந்திரங்களின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
வாகன உற்பத்தி, பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்திக்கு அரிய வகை தனிமங்கள் மிகவும் அவசியம். உலக நாடுகளின் அரியவகை தனிமங்களின் தேவையில் சுமார் 70 சதவீதத்தை சீனாவே பூர்த்தி செய்து வருகிறது.
இதன் காரணமாக சீனா விவகாரத்தில் அமெரிக்கா மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதேநேரம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ளார். இதனால் இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது.
இதனிடையே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆகஸ்ட் 31-ம் தேதி சீனாவின் தியான்ஜின் நகரில் தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சீனா செல்கிறார்.
இந்த சூழலில் இந்தியாவுக்கான ஏற்றுமதி தடையை சீனா முழுமையாக நீக்கியிருக்கிறது. குறிப்பாக உரங்கள், அரிய வகை தனிமங்களை இந்தியாவுக்கு தாராளமாக வழங்க அந்த நாடு முன்வந்திருக்கிறது. மேலும் சுரங்கங்களை தோண்டும் இயந்திரங்களை வழங்கவும் சீனா ஒப்புக் கொண்டிருக்கிறது.
இரு நாடுகள் இடையே மீண்டும் தரைவழி சரக்கு போக்குவரத்து தொடங்கி உள்ளது. நதிநீர் தொடர்பான தகவல்களை இந்தியாவுக்கு உடனுக்குடன் வழங்கவும் சீனா ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் இந்திய வேளாண் துறை, ஆட்டோ மொபைல் துறை அபார வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய பொரு ளாதார நிபுணர்கள் கூறியதாவது: முதல்முறையாக சீனா வளைந்து கொடுத்து இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியிருக்கிறது. இந்தியாவுக்கு தேவையான உரங்கள், அரிய வகை தனிமங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை தாராளமாக வழங்க அந்த நாடு முன்வந்திருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஓராண்டுக்கு 7,500 டன் அரிய வகை தனிமங்கள் தேவைப்படுகிறது.
இவற்றை முழுமையாக வழங்க சீனா முன்வந்திருக்கிறது. இதன்காரணமாக இந்திய பங்குச் சந்தையில் கார் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன. உலகின் 2-வது பொருளாதார நாடான சீனாவும், விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உரு வெடுக்க காத்திருக்கும் இந்தியாவும் கைகோத்திருப்பது சர்வதேச அரங்கில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இவ்வாறு இந்திய பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா – ரஷ்யா இடையே புதிய பொருளாதார வழித்தடம்: இந்தியா, ரஷ்யா இடையே புதிய பொருளாதார வழித்தடத்தை (ஐஎன்எஸ்டிசி) செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி இந்தியாவில் இருந்து சரக்கு கப்பல்கள் மூலம் ஈரான் துறைமுகங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து சாலை, ரயில் மார்க்கமாக காஸ்பியன் கடல் பகுதிக்கு இந்திய பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்.
பின்னர் காஸ்பியன் கடல் வழியாக சரக்கு கப்பல்கள் மூலம் ரஷ்ய துறைமுகங்களுக்கு பொருட்கள் கொண்டு சேர்க்கப்படும். இதே வழித்தடத்தில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, இயந்திரங்கள், உரங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இந்த வழித்தடத்தில் ரஷ்யா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். மேலும் ரஷ்யாவில் இருந்து ஆர்டிக் பகுதி வழியாக இந்தியாவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக், இந்தியாவின் சென்னை இடையே புதிய கடல் வழித்தடம் திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து மும்பைக்கு 8,675 கி.மீ. தொலைவுக்கு சரக்கு கப்பல்கள் பயணம் செய்கின்றன.
விளாடிவோஸ்டிக்- சென்னை கடல் வழித்தடத்தில் பயண தொலைவு 5,647 கி.மீ. ஆக குறையும். மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜவுளி, மருந்து, வேளாண் விளைபொருட்களை முழுமையாக வாங்கிக் கொள்ளவும் ரஷ்யா முன்வந்திருக்கிறது.