சென்னை: தமிழகத்தின் சாலை வசதிக்காக மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே போனது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உடுமன் பாறை பகுதியில் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவரை மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வால்பாறையில் உள்ள உடுமன்பாறை கிராமம் மாநிலத்தின் பிற பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு கூறி வருகிறது.
ஆனால், சாலை வசதி இல்லாததால், மருத்துவ சிகிச்சைக்காக முதியவர் ஒருவரைக் கிராம மக்கள் தொட்டில் கட்டி அழைத்துச் செல்வது இதயத்தை உடைக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் சாலை வசதிக்காக மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே போனது? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.