சென்னை: கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. அனைத்து விருதாளர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் செப்.17-ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவையொட்டி, விருது பெறுவோரின் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி, பெரியார் விருதுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, அண்ணா விருதுக்கு தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினர் சுப.சீத்தாராமன், கலைஞர் விருதுக்கு முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரன், பாவேந்தர் விருதுக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருதுக்கு மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருதுக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விருதாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், “கருப்பு- சிவப்புப் பாதையில் கொள்கை நடைபோடும் தீரர்களுக்கு விருதுகளை அறிவித்துள்ளது தலைமையகம். விருதாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
விருதுக்கு நன்றி தெரிவித்து கனிமொழி வெளியிட்ட பதிவில், “பெரியார் விருதுக்கு என்னை தேர்வு செய்திருக்கும் முதல்வர், அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கும், கட்சித் தலைமையகத்துக்கும் எனது நன்றி. விருதாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.