சென்னை: தமிழக அரசின் செய்தி, உயர்கல்வி, தொழிலாளர் நலன் ஆகியதுறைகள் சார்பில் ரூ.230 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), படப்பிடிப்புத் தளம், கல்விசார் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். குரூப் 1-ல் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.5.10 கோடியில் சீரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்தை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
உயர்கல்வித் துறை சார்பில், அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ.51.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்கள், வகுப்பறை கட்டிடங்கள், தேர்வுக் கூடம், ஆய்வக கட்டிடங்கள், புத்தாக்க வளர் மையம் போன்ற பல்வேறு கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.173.86 கோடி செலவில், 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம், கடலாடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அரசுதொழிற்பயிற்சி நிலையக் கட்டிடங்கள், சென்னையில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஆணையரகம், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம் மற்றும் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலர் ஓய்வு இல்லம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
89 பேருக்கு நியமன ஆணை: டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 89 பேருக்கு பணி நியமனஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இவர்களுக்கு செப்.8-ம் தேதி முதல் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பொது அடிப்படை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ரகுபதி, கோ.வி.செழியன், சி.வி.கணேசன், எஸ்.எஸ்.சிவசங்கர், கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர்கள் சி.சமயமூர்த்தி, வே.ராஜாராமன், கொ.வீரராகவராவ், பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.