புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
ஜிஎஸ்டி கட்டமைப்பில் தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய 4 அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன. இதை 5%, 18% என இரண்டு அடுக்காக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இதற்கு மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதை தொடர்ந்து, அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி பண்டிகையின்போது ஜிஎஸ்டி புதிய வரி விகிதம் அமல்படுத்தப்படும். இதனால், உணவு பொருட்கள், காய்கறி, பழங்கள், மருந்துகள், கார், ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி, ஜவுளி, சிமென்ட் உட்பட பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக குறையும். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதுபோல, தீபாவளி பண்டிகை மக்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.