சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 89 நபர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (25.8.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட தொகுதி 1-ல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம். ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 79,940 நபர்களுக்கும் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 38,110 நபர்களுக்கும், என மொத்தம் 1,18,050 நபர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I-க்கான முக்கிய பணியிடங்களுக்கான பணிகளில் 15 துணை ஆட்சியர்கள், 23 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 14 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 21 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள், 14 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் ஒரு மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்) என மொத்தம் 89 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அகில, இந்திய பணிகள் மற்றும் மத்திய அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு நடத்தப்படும் அடிப்படை பயிற்சியை (Foundation Course) போன்றே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில், கடந்த ஆண்டு முதல், தொகுதி-I அலுவலர்களுக்கு பொது அடிப்படை பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள 89 தொகுதி-1 அலுவலர்களுக்கு. வரும் செப்டம்பர் 8ம் நாள் முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் (Anna Administrative Staff College) பொது அடிப்படைப் பயிற்சி (Common Foundation Course) வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.