ஜம்மு: சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த, ஜம்மு காஷ்மீரின் அரசு நிர்வாகத் துறைகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்களின் அலுவலகங்களில் பென் டிரைவ்கள், பாதுகாப்பற்ற செயலிகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
தரவுகளின் ரகசியத்தை பாதுகாக்கவும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கும் நோக்கத்திலும் வாட்ஸ்அப் போன்ற செய்தி பகிர்வு தளங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி ரகசிய தரவுகளை பகிர்தல் அல்லது சேமிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சைபர் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தவும், முக்கியமான அரசாங்கத் தகவல்களைப் பாதுகாக்கவும், தரவு மீறல் அபாயங்களைக் குறைக்கவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக பொது நிர்வாகத் துறை ஆணையர் செயலாளர் எம்.ராஜு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், அந்தந்த நிர்வாகத் தலைவர் மூலம் மாநில தகவல் அதிகாரி, தேசிய தகவல் மையத்திற்கு அனுப்பப்படும் முறையான கோரிக்கைகளின் பேரில், ஒரு துறைக்கு 2-3 பென் டிரைவ்கள் வரை அனுமதிப்பட்டியலில் சேர்க்க அனுமதிக்கப்படலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றத் தவறுவது தீவிரமாகக் கருதப்படும் எனவும், இதனை மீறுவோர் மீது தொடர்புடைய விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும், இந்த உத்தரவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.