தமிழக வெற்றிக் கழகம் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரை மண்ணில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 23 தான் மாநாடு நடக்கும் தேதி என்றாலுமே கூட நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே சமூக வலைதளங்களில் மாநாடு குறித்த பகிர்வுகள் வலம் வரத் தொடங்கிவிட்டன. மதுரை மக்கள் ஏராளமானோர் மாநாட்டு பந்தலை கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்க சென்றது தவெக தொண்டர்களுக்கும் இன்னும் உற்சாகத்தை கூட்டியது.
மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் முதற்கொண்டு ஆளுங்கட்சியான திமுக தொடங்கி நாம் தமிழர் வரை பல்வேறு கட்சிகளின் ஆதரவாளர்கள் அக்குவேறு ஆணிவேராக ‘டீகோடிங்’ செய்யத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் ‘அங்கிள்’ என்று விளித்ததை திமுகவினர் ரசிக்கவில்லை. அமைச்சர்கள் முதல் ஐடி விங் வரை விஜய் மீதான விமர்சனக் கணைகளை வீசி வருகின்றனர்.
இது ஒருபுறமென்றால் விஜய்யின் ரசிகர்கள் / தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் செய்த அலப்பறைகளை சொல்லி மாளாது. அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் இணையத்தில் மீம் மெட்டீரியல்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக, பெண்மணி ஒருவர், “என் வீட்டுக்காரரை விட விஜய்யை தான் எனக்கு பிடிக்கும்” என்று சொன்னது, தவெக தொண்டர் ஒருவர் ‘விஜய்யை சிஎம் ஆக்குவதை விட பிரதமர் ஆக்குவதே எங்கள் நோக்கம்’ என்று கூறியது, க்ரீஸ் தடவப்பட்ட ஆளுயர கம்பிகளில் ஏறிய தொண்டர்களை பவுன்சர்கள் அலேக்காக தூக்கி வீசியது என விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு அடுத்த ஒரு ஆண்டுக்கான கன்டென்ட்களை வாரி வழங்கியுள்ளது இந்த மாநாடு.
கேலி, கிண்டல்களை ஒதுக்கிவைத்து சீரியஸான பார்வையுடன் இந்த மாநாட்டை அணுகினால், இதற்காக கூடிய பிரம்மாண்ட கூட்டத்தை எளிதில் நாம் புறந்தள்ளி விடமுடியாது. பல ஆண்டுகளாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளின் நிகழ்ச்சிகளிலேயே நாற்காலிகள் ஈயாடும் நிலையில், கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே விஜய் என்ற ஒற்றை முகத்துக்காக லட்சக்கணக்கான பேர் தன்னெழுச்சியாக கலந்து கொள்வது என்பதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளதக்க ஒன்றல்ல. அதுமட்டுமின்றி கடும் வெயில், கழிப்பறை பற்றாக்குறை, அதிக விலையில் உணவு என மாநாடு நடந்து கொண்டிருந்தபோது ஆங்காங்கே எழுந்த சில சலசலப்புகளை தவிர பெரியளவில் அந்த அசம்பாவிதங்களும் இன்றி மாநாட்டை நடத்தியதே வெற்றிதான்.
ஆனால், இவ்வளவு பிரம்மாண்டமான இந்த கூட்டம் எல்லாம் தேர்தலில் வாக்குகளாக மாறுமா என்பதே தற்போது அனைவரது முன்னாலும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் கூடுவது என்பது ஆச்சர்யப்படக் கூடிய ஒன்றல்ல. அதிலும் சினிமா நடிகர் என்று வரும்போது அவரை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுவது என்பது இயல்பு. இதனை நிரூபிக்கும் சில சம்பவங்களும் மாநாட்டில் நடந்தேறின.
மாநாட்டுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் விஜய் என்ற பெயருக்காகவே வந்திருந்தனர். விஜய் மேடையேறி ராம்ப் வாக் செய்யும்போதுதான் கூட்டத்தின் மத்தியில் உற்சாகம் ஊற்றெடுத்தது. விஜய்யின் ராம்ப் வாக் முடிந்த கையுடனே பலரும் மாநாட்டை விட்டு வெளியேறிய காட்சிகளை நேரலையில் பார்க்க முடிந்தது.
இதுபோன்ற சம்பவங்களின் மூலம் விஜய்யின் ரசிகர்கள் இன்னும் ஓர் அரசியல் கட்சியின் தொண்டர்களாக மாறவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்விக்கான விடை ஆந்திர அரசியலில் நடிகர் சிரஞ்சீவியின் தாக்கத்தை தெரிந்து கொள்வதன் மூலம் கிடைக்கலாம்.
ஆந்திர சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி, 2008-ஆம் ஆண்டு திருப்பதியில் தனது ரசிகர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை திரட்டி தனது அரசியல் பிரவேசத்தை பிரகடனப்படுத்தினார். அன்றைக்கு அவருக்கு கூடிய அந்தக் கூட்டத்தை பார்த்த ஆந்திர அரசியல் வட்டாரம் சற்றே ஆடித்தான் போனது.
10 LAKHS MEGA MILESTONE CROWD
Biggest Political Event In The INDIAN Political History
Incredible Aura Of Boss At That Time @KChiruTweets #MegaStarChiranjeevi #PrajaRajyam pic.twitter.com/MUraiiBInK
— We Love Chiranjeevi (@WeLoveMegastar) October 28, 2024
கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்து முதலமைச்சரான என்டிஆரின் வழியில் சிரஞ்சீவியும் முதல்வர் ஆவார் என அரசியல் நிபுணர்கள் பலரும் ஆரூடம் கூறினர். 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் சிரஞ்சீவியின் ‘பிரஜா ராஜ்யம்’ கட்சி ரயில் இன்ஜின் என்கிற சின்னத்தில் ஆந்திராவின் 42 நாடாளுமன்ற தொகுதியிலும், 294 சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிட்டது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் வெறும் 18 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.
பாலகொல்லு, திருப்பதி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி, திருப்பதியில் மட்டுமே வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் பிரஜா ராஜ்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
உட்கார்ந்தால் முதலமைச்சர் நாற்காலிதான் என்ற கனவுடன் களமிறங்கிய சிரஞ்சீவியின் மனக்கோட்டை ஒரே தேர்தலில் சில்லு சில்லாக சிதறியது. முதல்வர் ஆக சட்டசபைக்குள் செல்வார் என்று நினைத்த நிலையில், எதிர்கட்சி தலைவராக கூட ஆகமுடியவில்லையே என்று அவரது ரசிகர் படையும் வேதனையில் துடித்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரஜா ராஜ்யம் கட்சி காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவை உறுப்பினர், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தார் சிரஞ்சீவி. இப்போது பிரஜா ராஜ்யம் கட்சி இருந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. ‘கரியரின் உச்சத்தில் இருந்து’ அரசியல் கட்சி தொடங்கிய சிரஞ்சீவி, அதன் பிறகு மீண்டும் தனது பட வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.
சிரஞ்சீவியின் அரசியல் வாழ்க்கையை விஜய்யுடன் ஒப்பிட்டு மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைப்பதை பார்க்க முடிகிறது. அவர்கள் வைக்கும் விமர்சனங்களில் முக்கியமானது தவெக தொண்டர்களின் ரசிக மனப்பான்மை குறித்துதான்.
பவுன்சர்களிடம் அடிபட்டு மிதிபட்டாலும் பரவாயில்லை, தங்கள் தலைவருக்கு அருகில் சென்று ஒரு செல்ஃபியாவது எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து விட வேண்டும் என்று மரத்திலிருந்து குதிப்பது, காரை அதிவேகமாக பைக்கில் துரத்திச் செல்வது, இரும்புக் கம்பிகளின் மீது ஏறுவது, திரைப்பட வசூலைப் போல மாநாட்டு வந்தவர்களின் எண்ணிக்கையை சமூக வலைதளங்களில் பெருமிதத்துடன் பகிர்வது என இன்னும் ரசிக மனப்பான்மையிலேயே அவர்கள் இருக்கின்றனர் என்பதும், அவர்களை பக்குவப்படுத்த விஜய்யோ தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாகிகளோ எந்த முன்னெடுப்பும் எடுக்காததும், பலரின் பிரதான விமர்சனமாக உள்ளது.
மாநாட்டில் விஜய் பேசும்போது, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர் என பல தொகுதிகளின் பெயரைச் சொல்லி அங்கெல்லாம் போட்டியிடப் போவது உங்கள் விஜய் என்று சூளுரைத்தார். ஆனால் கட்சியில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்ற பரிச்சயமான முகங்களைத் தவிர தொகுதி அளவில் களத்தில் செயல்படும் ஆட்களை விஜய் ஊக்குவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
விஜய் தன்னுடைய பேச்சில், பிரதானமாக திமுகவையும், லேசாக பாஜகவையும் மட்டுமே திட்டிக் கொண்டிருக்கிறாரே தவிர தன்னுடைய அடுத்த கட்ட திட்டங்கள் என்ன? ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் தான் முன்னெடுக்கப் போகும் மாற்றங்கள் என்ன? இதுபற்றியெல்லாம் அவர் எதுவும் பேசுவதில்லை என்பது மற்றொரு விமர்சனம்.
மற்ற எந்த கட்சிக்கும் இல்லாத வகையில் சமூக வலைதளங்களில் தவெகவின் ஆதிக்கம் வியத்தகு வகையில் உள்ளது. பெரிய கட்சிகள் எல்லாம் ஐடி விங் செயல்பாடுகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்க,விஜய் ஆதரவாளர்கள் எல்லாருமே ஐடி விங் தான் என்று சொல்லும் அளவுக்கு இணையத்தில் தவெகவினரின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால், மக்களின் வாக்குகளை பெற சமூக வலைதள அளவிலான செயல்பாடுகள் மட்டுமே போதாது. களத்தில் இறங்கி செயல்பட்டால் மட்டுமே எளிய மக்களின் இதயத்தில் இடம்பிடிக்க முடியும் என்பதை உணர்ந்தால் தங்களுடைய நோக்கத்தில் தவெக வெற்றி பெற முடியும்.
சிரஞ்சீவி கட்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் படிப்பினையாக எடுத்துக் கொண்டு, வெறுமனே மாற்றுக் கட்சிகளை மட்டுமே விமர்சித்துக் கொண்டு இருக்காமல், சினிமா ரசிக மனப்பான்மையை விட்டு வெளியே வந்து கள அரசியலில் ஆக்கப்பூர்வமாக விஜய்யும், தவெகவினரும் செயல்படுவதே சாலச் சிறந்தது என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை.