சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பணிக்கு செல்லும் போது அரசு பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக, ரூ.1 கோடி வழங்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு, அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர், பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர் மணிக்குமார். கடந்த 18-ம்தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு மருத்துவர் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில், பணியின்போது போலீஸார் இறந்தால் உடனடியாக ரூ.1 கோடி வழங்குவதைபோல், உயிரிழந்த அரசு மருத்துவர் மணிக்குமார் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: அரசுப் பணியில் நேர்மையாக, அர்ப்பணிப்போடு பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் மணிக்குமார். அவரது உடல், மருத்துவமனைக்கே தானம் செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு என்பது அந்த குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும்.
முதல்வரே நிவாரணம் அறிவிப்பு: பொதுவாக, மற்ற துறைகளில் இதுபோன்று யாராவது உயிரிழந்தால் தமிழக முதல்வரே, உடனடியாக நிவாரண அறிவிப்பு வெளியிடுவதை பார்க்கிறோம். அதேபோல், அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த மருத்துவர் மணிக்குமாரின் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பிரவீனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.