இந்தி நடிகையான கீர்த்தி சனோன், இப்போது தனுஷ் ஜோடியாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமா பின்னணி இல்லாமல், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். அவர், சினிமாவில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது என்று கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “பாலிவுட்டில் வெற்றி பெற ஆர்வமும் கடின உழைப்பும் அவசியம். எதுவும் எளிதாகவோ, இலவசமாகவோ கிடைக்காது. குறுக்குவழி என்று எதுவும் இல்லை. ஆனால் முயற்சியை கைவிடக்கூடாது.
சினிமா பின்னணி இல்லாமல் வந்தால் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ‘உனக்கு ஏன் வாய்ப்புக் கிடைக்கவில்லை? உன்னிடம் ஏதோ குறை இருக்கிறது; நீ உயரமாக இருக்கிறாய், ஒல்லியாக இருக்கிறாய்; உன் உடல் சரியான வடிவத்தில் இல்லை என்று சுற்றி இருப்பவர்கள் குறைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்களால், அதை மட்டுமே செய்ய முடியும். ஆனால், உங்களால் முடியும் என்று உங்களைத் தவிர, உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.