சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முந்தைய அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்துக் கழகங்களை சிறப்பாக நடத்துவதற்கான சில ஆலோசனைகளை திமுக சார்பில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியிடன் வழங்கினார்.
இவ்வாறு திமுக வழங்கிய ஆலோசனைகளைக் கூட இந்த அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 20 ஆண்டுகளாக அரசு எவ்வித நிதியுதவியும் அளிக்கவில்லை. ரூ.100 வசூலானால் ரூ.13 வங்கிக் கடனுக்கு வட்டியாக செலுத்தப்படுகிறது.
இதைப்போல் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முன்வரவில்லை.
இந்த நிலையில் உள்ள போக்குவரத்துக் கழகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மாறாக மற்ற மாநிலங்களில் அரசு போக்குவரத்து நிறுவனங்களை அழிவுக்குக் கொண்டு சென்று தோற்றுப் போன திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த திமுக அரசு ஓராண்டாக முயற்சித்து வருகிறது.
போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கவும், பணியில் உள்ள ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அரசு முன்வர வேண்டும் என்பதே சிஐடியுவின் வேண்டுகோள். இந்த கோரிக்கையை முன்வைத்து கடந்த 18-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காணும் வரை காத்திருப்பு
போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.