சென்னை: ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பு நிகழ்வின்போது தலைமையிடம் நேரடியாக தெரிவிக்கப்படும் உட்கட்சி பிரச்சினைகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படாததால் திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் ஆளும் திமுக சார்பில் கடந்தாண்டே துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மாவட்ட வாரியாகவும், அணிகள் வாரியாகவும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது. அதன்பின் நிர்வாகிகள் நியமனம், மாவட்ட செயலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு உட்பட பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்தது.
அதன்படி கட்சியில் சில மாற்றங்களை திமுக செய்து வருகிறது. மாநிலத்தை 8 மண்டலங்களாக பிரித்து ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதிவாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல் வருமான ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதில், தொகுதி நிலவரம், உட்கட்சி பூசல்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் ஆதிக்கம், இளைஞரணியின் இடையூறுகள், நகராட்சி கவுன்சிலர்கள் தன்னிச்சை செயல்பாடுகள் என பல்வேறு தரப்பட்ட புகார்களை தலைமைக்கு கொட்டித் தீர்த்துள்ளனர். அதன்பின்னும் நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது: திமுகவில் நிர்வாக அமைப்புரீதியாக 76 மாவட்டச் செயலாளர்கள் இருக்கின்றனர். இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள், 234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மாநிலத்தை 8 மண்டலங்களாக பிரித்து அதற்கும் ஆ.ராசா, எவ.வேலு, கனிமொழி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
திமுகவை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்தான் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்சிப் பணிகள், தேர்தல் செயல் பாடுகளை கவனிப்பர். ஆனால், தற்போது மாவட்டச் செயலாளர், பொறுப்பு அமைச்சர், தொகுதி பொறுப்பாளர், மண்டலப் பொறுப்பாளர் என 4 தலைமைகள் இருப்பதால் நிர்வாகிகளிடம் இணக்கமான சூழல் இருப்பதில்லை. தனித்தனி அணிகளாக செயல்பட வேண்டிய கட்டாயமுள்ளது. இதுதவிர இளைஞரணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைவராக இருப்பதால் அவரின் ஆதரவாளர்கள் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றனர்.
இதனால் மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் யாரை பின்பற்றி செல்வது என்ற தயக்கம் நிலவுகிறது. உடன்பிறப்பே வா சந்திப்பில் பங்கேற்கும் நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்தான் முடிவு செய்கிறார். இதற்கு முன்பு கட்சி தொடர்பான பிரச்சினைகளை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணைச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் கவனித்து வந்தனர்.
இவர்கள் மாவட்ட, மண்டல அளவிலான முக்கிய பொறுப்பாளர்களுடன் இணக்கமாக உள்ளனர். மேலும், தலைவரை தனியாக சந்தித்து பேச 2 நிமிடங்கள்தான் தரப்படுகிறது. எனவே, இந்த சந்திப்பின்போது கள நிலவரங்களை குறைகளை சுட்டிக்காட்ட முடிவதில்லை. இதனால் இந்த சந்திப்புக்கான நோக்கமே அர்த்தமற்றதாகி விடுகிறது. அதேபோல், தலைமைக்கு கட்டுப்படாமல் பல்வேறு நகராட்சி கவுன்சிலர்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.
இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் அதிகளவில் வருகின்றன. இவை வேட்பாளர் தேர்வு, பூத் கமிட்டி அமைத்தல் போன்ற தேர்தல் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேட்பாளராக தகுதியான ஒருவரை மாவட்டச் செயலாளர் பரிந்துரை செய்தால், மற்ற தரப்பினர் அவர் குறித்த தவறான தகவல்களை தலைமைக்கு புகாராக தெரிவிக்கின்றனர்.
இதை உடன்பிறப்பே வா நிகழ்வின்போது தலைமையிடம் கூடுமானவரை பதிவு செய்துவிட்டோம். ஆனால், பெரும்பாலான விவகாரங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல்வேறு நலத்திட்டங்களால் திமுக ஆட்சிக்கு மக்களிடம் நல்லப் பெயர் இருந்தாலும் இத்தகைய பிரச்சினைகள் தேர்தலில் நமது வெற்றியை பரிசோதிக்கும். இவ்வாறு அவரகள் தெரிவித்தனர்.