மெக்கே: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மெக்கே நகரில் நேற்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 106 பந்துகளில் 100 ரன்களும், கேமரூன் கிரீன் 55 பந்துகளில் 118 ரன்களும் குவித்தனர். அலெக்ஸ் கேரி 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 432 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 24.5 ஓவர்களில் 155 ரன்களுக்குச் சுருண்டது.
எய்டன் மார்கிரம் 2, ரியான் ரிக்கெல்டன் 11, கேப்டன் தெம்பா பவுமா 19, டோனி டி ஜோர்ஸி 33, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1, டெவால்ட் பிரேவிஸ் 49, வியான் முல்டர் 5, கார்பின் போஷ் 17, செனுரன் முத்துசாமி 9 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஆஸ்திரேலிய அணி பெற்றது. இந்தத் தொடரில் அந்த அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது. ஆட்டநாயகனாக சதமடித்த டிராவிஸ் ஹெட்டும், தொடர்நாயகனாக கேசவ் மகராஜும் தேர்வு செய்யப்பட்டனர்.