திருச்சி: முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் குடும்ப சிந்தனைதான். வாக்களித்த மக்கள் மீது அவருக்கு அக்கறை கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பழனிசாமி, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் வறட்சியின்போது விவசாயிகளுக்கு ரூ.2,400 கோடி நிவாரணம் வழங்கினோம். இந்தியாவிலேயே அதிக உணவு தானிய உற்பத்தியை பெருக்கி, தமிழகம் முதலிடம் வகித்ததற்கு அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையே காரணம்.
திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்ததாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண்டறிந்து, அந்த மருத்துவமனைக்கு உடல் உறுப்பு அறுவை சிகிச்சைக்கான அனுமதியை ரத்து செய்தனர். ஆனால், பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடல் உறுப்பு திருட்டு தொடர்பாக அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக கோரிக்கையை ஏற்று காவிரியை தூய்மைப்படுத்த ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். அதிமுக தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததால், மத்திய அரசு நடப்பாண்டு ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை அனுமதித்து, அதற்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
காவிரி, பவானி, அமராவதி, நொய்யல் மற்றும் கிளை ஆறுகளில் வரும் நீர் சுத்திகரிக்கப்பட்டு, மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வழிவகை செய்தது அதிமுக அரசு. மேலும், 40 லிட்டர் பால் தரும் வகையில் கலப்பின பசுக்களை உருவாக்கும் கால்நடை பூங்காவை சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1,000 கோடியில் அமைத்தோம். அந்த திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அத்திட்டத்தை செயல்படுத்தி, கலப்பின பசுக்களை உருவாக்கி, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவோம்.
திமுக அரசு ஏழைகளுக்காக ஏதாவது ஒரு திட்டம் கொண்டுவந்ததா? முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் தனது குடும்பத்தைப் பற்றிய சிந்தனைதான் உள்ளது. வாக்களித்த நாட்டு மக்களைப் பற்றி அவருக்கு அக்கறை கிடையாது. தொழிலாளி, விவசாயி, மாணவர் என ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிமுக ஆட்சியில் பலன் கிடைத்தது. ஆனால், தற்போது கருணாநிதி குடும்பம் தான் பிழைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.