புதுடெல்லி: உலகளவில் தங்கத்தை அதிகம் வைத்திருக்கும் நாடுகளை உலக தங்க கவுன்சில் பட்டியலிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.
அமெரிக்காவிடம் தற்போதைய நிலவரப்படி 8,133 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதில் இருந்து மீண்டு வர தங்கம் பயன்படுகிறது. அமெரிக்காவிடம் தங்கத்தின் இருப்பு அதிகம் இருப்பதால், அமெரிக்க கரன்சியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் உலகளாவிய நிதிநிலையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது.
ஜெர்மனி 3,351 டன் தங்கத்தை இருப்பு வைத்து 2-வது இடத்தில் உள்ளது. 2-ம் உலகப் போருக்குப்பின், ஜெர்மனியிடம் உள்ள தங்கம் இருப்புதான் அதன் பலமாக இருந்தது. இத்தாலி, 2,451 டன் தங்கத்துடன் உலகத் தர வரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. இத்தாலியின் கடன் அதிகரித்தபோதிலும், இது தனது தங்க கையிருப்பை விற்று பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கிறது.
பிரான்ஸ் 2,452 டன் தங்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் கரன்சியான யூரோவுக்கு பிரான்ஸ் வைத்திருக்கும் தங்கம்தான் பலம் அளிக்கிறது. இதன் மூலமே ஐரோப்பிய கூட்டமைப்பின் நிதியில் பிரான்ஸ் சக்திவாய்ந்த நாடாக உள்ளது. ரஷ்யா 2,333 டன் தங்கம் இருப்புடன் 5-வது இடத்தில் உள்ளது. உக்ரைனில் ஊடுருவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. ரஷ்யாவின் கரன்சியான ரூபிளின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இறங்கின. இந்த பாதிப்புகளில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பது அதனிடம் உள்ள தங்கம் கையிருப்புதான்.
சீனா 2,292 டன் தங்கம் கையிருப்புடன் 6-ம் இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து 1,040 டன் தங்கத்துடன் 7-ம் இடத்தில் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள 880 டன் தங்கம் மூலம் உலகளவில் 8-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பை இந்த தங்கம்தான் நிலையாக வைத்துள்ளது. உக்ரைன், இஸ்ரேல் போர் காரணமாக உலகளாவிய பொருளாதார பிரச்சினைகளை சந்திக்கும்போதும், இந்த தங்க கையிருப்புதான் தடுப்புச் சுவராக உள்ளது. மேலும், இந்திய மக்களிடம் 25,000 டன் தங்கம் இருப்பு உள்ளது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய மறைமுக சக்தியாக இருந்து பலம் அளிக்கிறது.