சென்னை: ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதை உடனே வாபஸ் பெற தமிழக முதல்வருக்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் கோரிக்கை விடுத்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசிக்கு மாநில அரசு அனுமதி அளித்து இருப்பது விவசாயிகளை பெரிதும் அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்திருந்தது.
அதனை ஏற்கக் கூடாது என்று விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக கோரிக்கை வைத்திருந்தோம் அதனையும் மீறி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் (HELP) அடிப்படையில் மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலம் (OALP) மூலம் ஓஎன்ஜிசி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 143.41 சதுர கிலோமீட்டர் அளவிற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்று இருக்கிறது.
தற்போது அந்த பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகள் தோன்ற ஓஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ராமநாதபுரம் முதுகுளத்தூர் பரமக்குடி கீழக்கரை மற்றும் தேவகோட்டை தாலுகாக்கள் புதிய கிணறு அமைக்க ஓஎன்ஜிசி சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது.
வழக்கமாக ஒன்றிய அரசு புதிய parivesh தளத்தில் இந்த அனுமதியை ஆவணத்தை பதிவேற்றம் செய்யாமல் யாரும் அதிகம் பயன்படுத்தாத பழைய சுற்றுச்சூழல் அனுமதிக்கான தளத்தில் (envirnomentclearance,nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஏதோ உள்நோக்கத்தோடு மறைத்து செயல்படுவதாக தெரிகிறது. தமிழக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு காவிரி டெல்டாவை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது இந்த சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்ற எந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கிணறுகள் தொடர்ந்து செயல்பட முடியும் என்பதை உறுதி செய்துள்ளது.
ஆனால் விவசாயிகள் சங்கம் சார்பாக காவிரி டெல்டாவை பாதுகாக்க அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளையும் மூட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் சட்டம் அறிவித்தபடி திருவாரூர், நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டத்தில் ஐந்து வட்டாரங்கள் காட்டுமன்னார்கோவில், மேல புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஒன்றியங்கள் அறந்தாங்கி ஆவுடையார் கோவில் மணமேல்குடி திருவரங்குளம் கரம்பக்குடி ஆகிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டமாக ஆனதால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியாக அதை குறிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு சட்டத்தில் ஒரு திருத்தத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இச்சட்டம் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில் விடுபட்டுள்ள ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகள் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் அவர்கள் நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்து ராமநாதபுரம் வரை மனித சங்கிலி போராட்டம் அறிவித்தபோது அனைத்து மாவட்டத்திலும் திமுக முன்னணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். ஆனால் அதற்கு மாறாக இப்பொழுது புதிய ஆய்வுக்குணர்கள் அனுமதி வழங்கப்படுவது விவசாயிகளை மிகவும் வேதனடையை செய்து இருக்கிறது.
உடனடியாக இதனால் தமிழக விவசாயிகள் பெரும் இன்னல் உட்படுத்தப்படுவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உடைய குரலை மீறி ஓஎன்ஜிசி நிறுவனம் இக்கு கிணறுகள் அமைக்கப் பணியில் மேற்கொண்டால் களத்தில் கடுமையான எதிர்ப்புகளும் போராட்டங்களையும் நடத்துவதற்கு விவசாயிகளும் அனைத்து அமைப்புகளும் திரட்டி கடுமையான போராட்டத்தை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.